முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கொம்பு முளைத்தவர்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 28
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 04 ஜனவரி 2013 00:53

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இரண்டு வழக்குகளின் விசாரணை, குறித்து விரிவாகப் பார்ப்போம்.

06VBG_ADALAT_746045f

நேற்று எழுதப்பட்ட நேனே தேவுடு கட்டுரை படித்திருப்பீர்கள். அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி நேற்று மாலையே ஃபேக்ஸ் மூலமாக வெளி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முழு நேர சட்டப்படிப்பு படித்த இரண்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதன் மூலம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பு செய்த குற்றத்துக்கு ஆளாகியுள்ளதால், வழக்கறிஞர் அறிவிக்கை கிடைத்த மூன்று நாட்களுக்குள், சட்டவிரோதமாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்து, வெளி மாநிலங்களில் சட்டம் படித்த முழு நேர நீதிமன்ற ஊழியர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பிய அறிவிக்கையை, பொறுப்பு தலைமை நீதிபதியான எலிப்பி தர்மாராவ் படித்திருப்பார் போலிருக்கிறது.  அதன் தாக்கம் இன்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் போது நன்றாக வெளிப்பட்டது.

முதல் வழக்கு மறுக்கால் குறிச்சியில் கடந்த ஜுலை மாதம் நடந்த ஒரு போலி என்கவுன்டர் குறித்த வழக்கு. இது குறித்து சவுக்கு தளத்தில் பட்டப்பகலில் ஒரு படுகொலை மற்றும் ஒரு கொலை ஓராயிரம் பொய்கள் ஆகிய கட்டுரைகளிலும் விரிவாக எழுதப்பட்டிருந்தது.  இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முதல் நாள் அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைப் பார்த்து நீதிபதி எலிப்பி தர்மாராவ் கடும் வெறுப்பில் இருந்திருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே, மனுதாரர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தாரா… ? என்று கேட்டார்.  இல்லை என்றதும் வெறும் செய்தித்தாளின் அடிப்படையில் எப்படி பொது நல வழக்கு தாக்கல் செய்கிறீர்கள் என்று கேட்டார்.  செய்தித்தாளின் அடிப்படையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதை உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது என்றார் தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ, குடும்பத்தினரோதான் வர முடியும். ஒரு வழக்கறிஞர் வர முடியாது என்றார். இதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார்.

தள்ளுபடி செய்வதாக இருந்தால், இந்த போலி என்கவுன்டர் தொடர்பாக ஒரு புகார் அனுப்பப்பட்டுள்ளது.  அந்தப் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசுத் தரப்பு சொல்ல வேண்டும்.  சொன்ன பிறகுதான் இந்த வழக்கில் முடிவெடுக்க முடியும்.  இது போன்ற வழக்குகளில் செய்தித்தாளை வைத்து, பொதுநல  வழக்கு தாக்கல் செய்யக்கூடாது என்றால், காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொலை செய்வார்கள் என்றார் ராதாகிருஷ்ணன்.  அரசுத்தரப்பைப் பார்த்து என்ன செய்திருக்கிறீர்கள் என்றார் எலிப்பி தர்மாராவ். வண்டு முருகன் தயாராக இருந்தார்.  மை லார்ட்.  சிபி சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.  4 அக்டோபர் 2012 அன்று சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 52 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார்.

உடனே திரும்பவும் எலிப்பி தர்மாராவ் முருங்கை மரத்தில் ஏறி விட்டார்.  நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.  விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.  உடனே ராதாகிருஷ்ணன், “நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள், அது குறித்து கவலை இல்லை. முதலில் என்னை வாதிட அனுமதியுங்கள்.  அதன் பிறகு தள்ளுபடி செய்யுங்கள்” என்றார்.  வேண்டா வெறுப்பாக சரி வாதிடுங்கள் என்றார்.

என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்புகளை எடுத்துரைத்த ராதாகிருஷ்ணன் என்கவுன்டர்கள் போன்ற விவகாரங்களில், மாநில காவல்துறை விசாரித்தால் அது நம்பிக்கை அளிக்காது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருந்ததை சுட்டிக் காட்டி வாதிட்டார்.   வேளச்சேரி என்கவுன்டர் வழக்கில் இந்தத் தீர்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகள் இதே டிவிஷன் பென்ச் முன்னால் வாதிடப்பட்டதையும், அந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.  அந்த வழக்கில் உள்ள அதே அடிப்படைகள் இந்த வழக்குக்கும் பொறுந்தும் என்பதால், இதில் வேறு மாதிரியான முடிவு எடுக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டார்.

வண்டு முருகனைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள் என்றார்.  வண்டு முருகன் இந்திய தண்டனைச் சட்டம் 353 மற்றும் 307ன் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  சம்பவத்திற்கு பிறகு அது 176 பிரிவாக மாற்றப்பட்டது என்றார்.

353 ஒரு பொது ஊழியரை ஆயுதத்தோடு தாக்குவது.  307 கொலை முயற்சி.  சம்பவத்திற்கு பின்னர் 176.  176 என்பது, காவல் நிலையத்திலோ அல்லது சிறையிலோ ஒருவர் இறந்தால் நடக்கும் விசாரணை குறித்த பிரிவு.

நாங்குநேரி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், என்றைக்கு வழக்கை பதிவு செய்தார்கள், அந்த வழக்கு எப்போது 176ஆக மாற்றப்பட்டது, இறந்து போனவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தானே இந்தப் பிரிவு பொறுந்தும் என்பன போன்ற கேள்விகள், அடிப்படை சட்ட அறிவு இருந்தாலே எழக்கூடிய கேள்விகள்…  இதையெல்லாம் அரசு பதில் மனுத்தாக்கல் செய்த பிறகுதானே ஆராய முடியும் ?  அதற்குள் வழக்கை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் ?  அப்படி என்ன அவசரம் ?

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அரசுத் தரப்பை திங்களன்று பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிடாமல் விட்ட ஒரு விஷயம், கடந்த டிசம்பர் 13 அன்று மானாமதுரையில் ரவுடி வெள்ளத்துரை காக்கி உடை அணிந்து கொண்டு இரண்டு ரவுடிகளை சுட்டுக் கொன்ற போலி என்கவுன்டர் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இதே எலிப்பி தர்மாராவ்தான், அரசுத் தரப்பை பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த வழக்கும், செய்தித்தாளின் அடிப்படையிலேயே, இதே வழக்கறிஞர் புகழேந்தியால் தாக்கல் செய்யப்பட்டது.    அன்றைக்கும், இன்றைக்கும் என்ன மாற்றம் வந்து விட்டது ?

அடுத்த வழக்கு மீன் குழம்பு வைப்பது பற்றியது. முன் விபரம் தெரியாத வாசகர்கள், நமக்கு வாய்த்த அடிமைகள் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

எடுத்த எடுப்பிலேயே பொதுநல வழக்கு என்ற போர்வையில், அரசுப் பணிகள் (Service Matter) தொடர்பாக தொடரப்பட்டட வழக்கு என்றார் எலிப்பி தர்மாராவ். இது சர்வீஸ் மேட்டர் அல்ல…  சம்பந்தப்பட்டவரின் பணி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்காக இந்த வழக்கு தொடரப்படவில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.

பாதிக்கப்பட்டவர்தானே வந்திருக்க வேண்டும்… ?  ஒரு வழக்கறிஞர் எப்படி இந்த வழக்கை எடுத்து வரலாம் ? என்றார் எலிப்பி.  வழக்கறிஞர்களுக்கு கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றத்திலும் நடப்பவற்றை சீர் செய்யும் பொறுப்பு இருக்கிறது என்றார்.   நீதித்துறையில் வழக்கறிஞர்களுக்கு சம அந்தஸ்தும் பொறுப்பும் உள்ளது என்றார். மேலும், நீதித்துறையில் இது போன்ற அடிமைத்தனங்கள் நடப்பதை வழக்கறிஞர்கள் கேட்காமல் வேறு யார் கேட்பது என்றார்.

உடனே எலிப்பி தர்மாராவ், இந்த நியமனங்கள் (அலுவலக உதவியாளர்கள்) எல்லாம் எப்படி நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா ?  எப்படி வேலைக்கு வருகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா என்றார்.

ராதாகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் நியமனங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்,  தெரியும் என்பதில் ஒரு அழுத்தத்தோடு.

DSC_1020

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்

உடனே எலிப்பி தர்மாராவ், வேலை கிடைக்கும் வரை அவர்கள் எங்கள் பாதங்களைத் தொடுகிறார்கள், கிடைத்ததும் சரிவர வேலை பார்ப்பதில்லை (Do you know till they get appointment they touch our feet… but after getting appointment they behave like this)

எங்களுக்கு பழம் வேண்டுமென்றால் கூட, நாங்களே சந்தைக்குச் சென்று பழம் வாங்க வேண்டுமா ? (If we want to have fruit, should we go to the market and get fruit ?)

அருகில் இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த நீதிபதி அருணா ஜெகதீசன் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வந்து விட்டால் வீட்டில் யார் சமைப்பது என்றார்.

thumb

வலது ஓரத்தில் இருப்பவர் நீதிபதி அருணா ஜெகதீசன்

மீண்டும் குறுக்கிட்ட எலிப்பி தர்மாராவ், அவர்கள் அடிப்படை பணியாளர்கள், சேவை செய்வதற்காகவே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்  சேவை செய்ய வேண்டிய நேரத்தில் அவர்கள் சேவை செய்ய வேண்டும். இந்த பொதுநல வழக்கு அதிகப்படியானது என்றார்.  (They belong to basic service. They are here to serve. When they are required to serve, they have to serve. This is too much).

பிறகு, பாதிக்கப்பட்டவர் ஏன் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

உடனே ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நியமன அதிகாரியும். (Appointing authority) ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும், (Disciplinary Authority) நீதிபதியும் (Judge) ஒரே நபராக இருந்தால், பாதிக்கப்பட்டவர் எப்படி நீதிமன்றத்தை அணுக முடியும் என்றார்.

அதெல்லாம் சரி.  பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்யவில்லை, அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார். உடனே ராதாகிருஷ்ணன், இந்த மனுவில் பொதுவான கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.  பணி தொடர்பானது அல்ல.  தமிழகத்தில் எந்த நீதிபதியும் வீட்டு வேலைக்கு அலுவலக உதவியாளரை பயன்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது, தவிரவும் அந்த நீதித்துறை நடுவர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது, அது குறித்து வாதிட வேண்டும் என்றார்.

உடனே எலிப்பி தர்மாராவ், இது குறித்து நிர்வாக ரீதியாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் (We will take action in the administrative side) என்று கூறி, வழக்கை முடித்து வைத்ததாக கூறினார்.  இது திறந்தவெளி நீதிமன்றத்தில், அனைவர் முன்னிலையிலும் நடந்தது.

ஆனால் மாலையில், எலிப்பி தர்மாராவ் கொடுத்த தீர்ப்பில் இருந்த வாசகங்கள், Siince the party affected by the suspension has not filed this Writ Petition and the same has been filed by a practicing advocate, we are not inclined to entertain this petition.

பாதிக்கப்பட்ட நபர் இந்த வழக்கை தாக்கல் செய்யாமல், ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்திருப்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பை எப்படி மாற்றியிருக்கிறார் பார்த்தீர்களா…

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.

இந்த வழக்கு நடக்கையில், எலிப்பி தர்மாராவ் உதிர்த்த முத்துக்கள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியன.

“வேலை கிடைக்கும் வரை அவர்கள் எங்கள் பாதங்களைத் தொடுகிறார்கள், கிடைத்ததும் சரிவர வேலை பார்ப்பதில்லை”

ஒரு மனிதன், இன்னொரு மனிதனின் காலில் விழுவதைப் போன்ற இழிவான காரியம் இருக்க முடியுமா ?  பெரியவர்களின் காலில் மரியாதையோடு விழுவதை விட்டு விடுங்கள்.   தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக மற்றொருவர் காலில் விழுவதையும், அதை ஒருவர் அங்கீகரிப்பதும் நாகரீகமான மனிதன் செய்யும் செயலா ?  அதிமுகவில் உள்ள அடிமைகள் எதற்காக ஜெயலலிதாவின் காலில் விழுகிறார்கள் ?  ஜெயலலிதா ஒரு ஜென் தத்துவ ஞானி என்பதற்காகவா ?   காலில் விழுந்தால் தங்களுக்கு ஆதாயம் என்பதற்காகத்தானே விழுகிறார்கள் ?  அப்படி காலில் விழுபவர்களுக்கு பதவியை வழங்கி கொள்ளையடிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்தானே ஜெயலலிதா.

அதைப்போன்றதுதானே எலிப்பி தர்மாராவ் இன்று நீதிமன்றத்தில் சொன்னதும் ?‘ ஒரு மனிதன் காலில் விழுகிறானே, அப்படி விழும் நிலையில் அவன் வாழ்நிலை உள்ளதே என்று வெட்கப்பட வேண்டாமா ?  அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான அடிமை வழக்குககளை ஒழித்துக் கட்ட வேண்டாமா ?  சுயமரியாதை உள்ள ஒரு மனிதன் காலில் விழுவானா ?  அப்படி விழுந்தாலும் சுயமரியாதை உள்ள எந்த மனிதனாவது அதை அங்கீகரித்து ஊக்குவிப்பானா ?

அரசு வேலையை காலில் விழுவதால் வழங்கப்படுகிறது என்பதை தலைமை நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவர் சொல்லலாமா ?  விதிமுறைகளின்படி, அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் உள்ள நிலையில், ஒரு நீதிபதி காலில் விழுந்து வேலை வாங்குகிறார்கள் என்று பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?  இப்படிக் காலில் விழுந்ததால்தான் 55 அலுவலக உதவியாளர்களை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்குகிறார்களா ? பாலியல் வன்முறைக் குற்றவாளி நீதிபதியின் காலில் விழுந்தால் அவனை விட்டு விடுவாரா எலிப்பி தர்மாராவ் ?

அப்படியே காலில் விழுந்து வேலை பெற்றதாகவே வைத்துக் கொள்ளலாம்.  அலுவலக உதவியாளராக வேலை பெற்ற ஒருவன், காலம் முழுவதும், நீதிபதியின் வீட்டில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருக்க வேண்டுமா ?

இந்த நீதிபதிகள் கூடத்தான் “ நீதிபதியாக நியமிக்கப்பட்ட நான், மனசாட்சிப்படி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பால் உறுதியாகவும், உளச்சான்றோடும் பணியாற்றுவேன், எனது பணிகளை விருப்பு வெறுப்பின்றி, பாகுபாடின்றி, பயமின்றி, சட்டத்தின் மேன்மையைக் காக்க பாடுபடுவேன்”  என்று பதவியேற்கையில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.  அதன்படிதான் நடந்து கொள்கிறார்களா ?

காலில் விழுந்து வேலை வாங்கியதால் ஒருவன், காலம் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படிப்பட்ட ஒரு எதேச்சதிகாரம் ?  ஆணவம் ? காலில் விழுந்து வேலை வாங்கிய ஒருவனை கொத்தடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகள்தான் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை காப்பாற்றுவார்கள் என்று நீதிபதிகளாக நியமிக்கிறார்கள்….  இப்படிக் காலில் விழும் அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கவா அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார் ?

காலில் விழுந்து வேலை வாங்குவதை சுயமரியாதைக்கு இழுக்கு, அடிமைத்தனம் என்று நினைக்காத எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகள், யார் காலிலாவது விழுந்து நீதிபதியாகியிருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

அடுத்ததாக எலிப்பி தர்மாராவ் சொன்னது அகம்பாவத்தின் உச்சம்.

“எங்களுக்கு பழம் வேண்டுமென்றால் கூட, நாங்களே சந்தைக்குச் சென்று பழம் வாங்க வேண்டுமா ?”

ஒரு சந்தைக்குச் சென்று பழம் வாங்குவதைக் கூட இழுக்கு என்று கருதும் எலிப்பி தர்மாராவ் என்ன வானத்தில் இருந்து குதித்தவரா ? இறைத்தூதரா ?   சாகாவரம் பெற்றவரா அல்லது தெய்வப் பிறவியா ? அவரும் மனிதர்தானே…. அவருக்கும் மரணம் என்பது உண்டுதானே ?

கடையில் சென்று பழம் வாங்குவதை இழுக்காகக் கருதும் எலிப்பி தர்மாராவ், இதே உயர்நீதிமன்றத்தின் எதிரில் உள்ள சந்துகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மனிதர்களைப் பார்த்திருக்கிறாரா ?  அவர்கள் எப்படிப்பட்ட சூழலில், கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது எலிப்பிக்கு தெரியுமா ?  30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வாழ்க்கை மேம்படாமல் இன்னும் நடைபாதையிலேயே வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா ?

அவர் சார்ந்து சமூகத்தையே சேர்ந்த, லட்சக்கணக்கான மக்கள் எப்படிப்பட்ட மோசமான வறுமையில், சேரிகளில் உழன்று வருகிறார்கள் என்பது எலிப்பிக்குத் தெரியுமா ? அந்த சேரி மனிதர்களின் வாழும் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு நீதிபதி, கடையில் சென்று பழம் வாங்குவது இழுக்கு என்று கருதுவாரேயானால், இவரைப்போன்ற நீதிபதிகள், ஏழைகள், உழைப்பாளிகள், தலித்துகளை என்ன மனநிலையோடு பார்ப்பார்கள் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

திறந்த நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பைக் கூறியதும் அந்த அடிப்படையில் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  மாலையில் உத்தரவை பார்த்தால், சம்பந்தப்பட்டவர் வழக்குக்காக வரவில்லை, வழக்கறிஞர் வந்திருக்கிறார் என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பெழுதுவது எந்த விதமான நீதி ? இதுதான் உளச்சான்றின்படி எழுதப்படும் நீதியா ?

நீதிபதி அருணா ஜெகதீசன் கேட்ட கேள்வியும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதே.  நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வந்தால் வீட்டில் யார் சமைப்பது.

நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களே…. இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலையில் எழுந்து, சமைத்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, கணவருக்கு உணவு கட்டி, தங்களுக்கும் உணவு கட்டி, உரிய நேரத்தில் வருகைப் பதிவேட்டைப் பிடிக்க, பேருந்துக் கூட்ட நெரிசலில் சிக்கி சக்கையாக பிழியப்பட்டு, நீதிமன்றம் வந்து, திமிர் பிடித்த வழக்கறிஞர்களிடம் ஏச்சு வாங்கி, மாலை ஆறு மணிக்கு வேலையை முடித்து, மீண்டும் அதே கூட்ட நெரிசலில் சிக்கி, வீடு சென்று, மீண்டும் இரவு உணவு சமைத்து, வார இறுதியில் வரும் அந்த ஞாயிற்றுக்கிழமைக்காக ஏங்கியபடி தங்கள் வாழ்க்கையை ஓட்டுவது உங்களுக்குத்  தெரியுமா ? அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்… நீதிமன்றத்துக்கு வந்தாலும் எப்படி சமைப்பது என்பதை சொல்வார்கள்.   நீதிபதியாகி விட்டால் சமையல் செய்வது கூட இழிவான செயலாக எப்படி மாறிப்போகிறது என்பது உண்மையிலேயே புரியவில்லை.

உங்களைப் போன்ற நீதிபதிகளுக்கு வேலைக்கு ஒன்பது பேர் இருக்கிறார்கள்.  தும்மினால் மூக்கு துடைத்து விடக் கூட ஆட்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நடக்கையில் உஸ்ஸு சொல்லக் கூட ஆட்கள் இருக்கிறார்கள்.  உங்களோடு பணியாற்றும் உழைக்கும் பெண்களைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா ?  இதே தமிழ்நாட்டின் சேரிகளில் வசிக்கும் தாய்மார்கள், கூலி வேலை செய்துகொண்டே, குடும்பத்தை எப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ?  அந்த உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில்தான் உங்களுக்கு இந்த சொகுசு வாழ்க்கை என்பதை ஒரு நிமிடமாவது யோசித்திருக்கிறீர்களா ?

அன்பார்ந்த நீதிபதிகளே… …. நீதிபதியாகிய மறுநாளே உங்களுக்கெல்லாம் தலையில் கொம்பு முளைத்து விடுவதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்.  அப்படிக் கொம்பு முளைத்ததாக நினைத்துக் கொள்வதால்தான், கொத்தடிமைகளை வளர்க்க விரும்புகிறீர்கள்.   இது போன்ற வழக்குகளை உங்களிடம் எடுத்து வந்தால் நீங்கள் உடனே உரிமைகளை நிலைநாட்டி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இல்லை.  ஏனென்றால், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகிய நீங்கள் உங்கள் வீட்டில் இதை விட மோசமான கொத்தடிமைகளை வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியும்.  வள்ளியூர் நீதித்துறை நடுவருக்காவது ஒரே ஒரு கொத்தடிமை.  உங்கள் ஒவ்வொருவருக்கும் வீட்டில் 9 கொத்தடிமைகள் என்பது எங்களுக்கும் நன்றாகத் தெரியும். கொத்தடிமைகள் வேண்டும் என்பதால்தான், விதிகளைப் பின்பற்றாமல் காலில் விழும் நபர்களை சட்டவிரோதமாக நியமிக்கிறீர்கள்.   இந்த கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க ஒரு நாளும் நீங்கள் சம்மதிக்க மாட்டீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

ஆனால், இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்ததால்தான், உங்கள் மனதில் உள்ள அழுக்குகள் இன்று வெளித்தெரிந்தது.  எப்படிப்பட்ட எதேச்சாதிகாரிகளாகவும், மனிதத் தன்மையற்றவர்களாகவும், பிரபுத்துத்துவ மனப்பான்மையோடு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் தீர்ப்புகள் மூலமாக வெளிக் கொண்டு வருவதற்காகவே இப்படிப்பட்ட பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்கிறோம்.   இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதால் எங்களுக்கு வருத்தமோ அவமானமோ இல்லை.

மனித உரிமைகளைக் காக்க மறுத்து, கொத்தடிமைத்தனத்துக்கு உரம் போட்டு வளர்க்கும் கொம்பு முளைத்த நீதிபதிகளாகிய உங்களுக்குத்தான் அவமானம்.

 

Comments  

 
+1 #27 Robinhood 2013-01-17 13:37
ஆணவம்,அகம்பாவம் இருப்பவர்களிடம் , நீதி நேர்மை மனிதாபிமானம், எப்படி
இருக்கும்? அலுவலக வுதவியாளர்கள் பணி என்றால் அலுவலக தொடர்பான பணியகதானே இருக்கும்? மீன் குழம்பு வைப்பது, துணி துவைப்பது , போன்றவை அவர்கள் பணியா? காலில் விழுந்து வேலையில் சேருகிறார்கள் என்று சொல்வது ஆணவத்தின் வுச்சம்.நீங்கள் வுச்ச நீதி மன்றத்தை அணுகலாமா?
Quote
 
 
+1 #26 S.Dhanasekaran, 2013-01-11 20:52
the real face of the judges have been shown in Savuku news, please continue the same.
Quote
 
 
+5 #25 venkat2224 2013-01-07 16:06
we can appeal in Supreme Court. SO this matter should be taken in to Delhi.
Quote
 
 
0 #24 thiyagu13586 2013-01-07 15:23
[ஃஉஒடெ நமெ="தியகு13586"]ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி வழக்கில் இவர் சிறப்பான முறையில் தீர்ப்பு வழங்கியதாக
கேள்வி![/ஃஉஒடெ]

இதை படியுங்கள்

http://www.savukku.net/home1/107-2010-09-30-06-59-38.html
Quote
 
 
+1 #23 vijay pdk tup 2013-01-06 13:09
அருமை
Quote
 
 
+1 #22 ஷாலி 2013-01-06 00:15
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

ஊழலின் சிரிப்பில் நீதியைக் காண்போம் !!
:lol: :P :lol:
Quote
 
 
0 #21 thiyagu13586 2013-01-05 19:38
ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி வழக்கில் இவர் சிறப்பான முறையில் தீர்ப்பு வழங்கியதாக
கேள்வி!
Quote
 
 
+5 #20 Ji M 2013-01-05 10:55
என் நாட்டின் நிலைமைய நினைச்சு அழுது கொண்டே படித்தேன் இந்த கட்டுறையை.
Quote
 
 
+9 #19 Selvamani 2013-01-05 06:18
அய்யா, தங்களது கட்டுரைகளை படித்தேன். ஊர் நாட்டாமைக்கு வூட்டு சேதி தெரியாது..ன்னு சொல்வோம். நீதிமன்றங்களை சீர்திருதினாலே போதும். பல குற்றங்கள் குறையும்.
Quote
 
 
+11 #18 Padmanan 2013-01-05 02:08
இது போன்ற விமர்சனத்திற்கு நீதிபதிகள் ஆளாவது வேதனை தருகிறது. மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடும் தோழர் ராதாகிருஷ்ணன் மற்றும் புகழேந்தி போன்றவர்களை நீதிமன்றங்கள் ஊக்கப்படுத்தவேண ்டும். முடியவில்லையெனி ல் உதாசினப்படுத்தா மல் இருக்க வேண்டும். இதுபோன்று திறமைவாய்ந்த வழக்கறிஞர்கள் பணத்திற்காக வாதாடாமல் மக்கள் நலனுக்காக வாதாடுவது மிகவும் அரிது என்பதை நீதிபதிகளுக்கு நன்று தெரியும். அப்படி தெரிந்தும் இதுபோல் தள்ளுபடி செய்வது இவர்கள் பாராளுமன்ற கூண்டினை பார்க்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. அரசியல்வாதிகள் மீதிருக்கும் எரிச்சல் நிதிமன்றங்கள் மீது திரும்பாமல் பார்த்துக்கொள்வ து இவர்களுடைய கடமை.

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்டிலிர ுந்து வந்தவர். ரிசர்வ் வங்கியின் முன்னால் இயக்குனர் ரங்கராஜனோடு நெருக்கமாக பணி செய்தவர் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
Quote
 
 
+7 #17 நெல்லை பாலாஜி 2013-01-05 00:57
@Kathikeyan S

Kathi, Jeya is living example for all these..People may not understand when we say CJ of Madras of doing this and that..But they will understand,if you say " its like Jeya" .. :)..Chill out..Jeya is the combination of all evils in the world..Not to mention Karuna too comes into that club..So pointing out Jeya in any article is worth and make the reader understand the issue..No worries!!!
Quote
 
 
+1 #16 ஊர்க்குருவி. 2013-01-04 23:17
ஒரு நாட்டில் ஒரு சர்வாதிகாரி வாழ்ந்துவந்தான் . அவன் தான் நடந்து செல்வதே இழுக்கு என கருதினான். அதனால் அவன் போகவேண்டிய இடங்களுக்கு அவனை பல்லக்கில்வைத்த ு அடிமைகள் சுமந்துசென்றனர் . அவனைச்சுற்றி இரவும்பகலும் அடிமைகள் கூட்டம் தொடர்ந்து இருந்துகொண்டிரு ந்தது. இது சர்வாதிகாரிக்கு பெருமையாக இருந்தது. சர்வாதிகாரி தனது அதிகாரத்தை நிலைநாட்டும் விதமாக பல தாரங்களை (சின்னவீடு) அங்காங்கே வைத்திருந்தான். தினமும் ஒரு வீட்டுக்கு அடிமைகள் அவனை தூக்கிச்சென்றனர ், ஒருசந்தர்ப்பத்த ில் நாட்டில் மின்சாரம் காலைவாரியது தெரு வீதி அனைத்தும் இருண்டுபோனதால் அடிமைகள் சர்வாதிகாரியை பல்லக்கில் வைத்து தூக்கிச்செல்லும ்போது எதிரிகள் தாக்கக்கூடும் என சர்வாதிகாரி அஞ்சினான் அதனால் அவன் கிரமமாக மனைவிமார்களிடம் செல்ல முடியவில்லை. இதனால் மனைவிமார் மிகவும் வேதனையடைந்தனர் சரியாக ஒருவருடம் மின்சாரம் காலைவாரிக்கொண்ட ேயிருந்தது சர்வாதிகாரி தனக்கு மிகவும் பிடித்த இரண்டு சித்திகளை மட்டும் தனது இருப்பிடத்துக்க ு வரவழைத்து ஒரு வருட காலத்தை கழித்தான் ஒருவருடம் கழிந்த நிலையில் மின் தட்டுப்பாடு சீர்செய்யப்பட்ட து அன்று குதூகலத்துடன் தனது மூத்த மனைவி வீட்டுக்கு தூக்கிச்செல்லும ்படி அடிமைகளிடம் கட்டளையிட்டான் அடிமைகள் தூக்கிச்சென்றனர ் அங்கே அவனது மனைவி வீட்டில் இல்லை. மனைவி எங்கே என்று அதிகாரத்துடன் சர்வாதிகாஅரி வினவினான் அப்போ ஒரு அடிமை கூறினான் அம்மாவை குழந்தை பேறுக்காக ஆஸ்ப்பத்திரியில ் சேர்த்திருக்கிற ோம் என்று பணிவாக கூறிவிட்டு மறைந்துவிட்டான் .
Quote
 
 
+3 #15 mathi 2013-01-04 22:55
Judge should not know the law. but he should know the Humanity.and be a gentle man.
Quote
 
 
+15 #14 ஊர்க்குருவி. 2013-01-04 22:52
சந்தையில்ப்போய் பழம் வாங்கி உண்பது உனக்கு இழுக்கென்றால் தனிப்பட்டமுறையி ல் ஒரு வேலையாளை வைத்துக்கொள். இப்படியான குற்றச்சாட்டுக் கள் வந்து சந்தி சிரிக்காது உயர்வாக மதிக்கப்படும் நீதித்துறைக்கு இழுக்கு வராது . அப்படியில்லையென ்றால் பழம் தின்னாமல்கிட, உனக்கு பழம் தின்ன அருகதையில்லை.

நீயும் ஒரு அரசு ஊழியன் நீ கொத்தடிமையாக வைத்திருக்க நினைப்பதும் அரசு ஊழியன் அவனுக்கு சுயமரியாதை இருக்கக்கூடாது என்று நீ எப்படித்தீர்மான ிக்கமுடியும். பணாம் மட்டும் சுயமரியாதையை தீர்மானித்துவிட ுமா? உனக்கு கீழ் உள்ளவன் உனது காலில் விழவேண்டுமென நீ நினைத்தால் உனக்கு மேலே உள்ளவனின் காலில் நீயும் விழுகிறாய் என்றுதானே அர்த்தப்படும் அப்படியான உனக்கு கடைக்குச்சென்று பழம் வாங்கி தின்னுவதில் என்ன குறைந்துவிடப்போ கிறது. முன்னாள் முதலமைச்சராக இருந்த மு கருணாநிதி தமிழ்நாட்டில் எவ்வளவு அடிமைகளை வைத்திருந்தாலும ் 2011ல் தனது மகள் திஹாரில் இருந்து விடுப்புப்பெறவே ண்டும் என்பதற்காக டில்லிக்குச்சென ்று கறுப்புக்கண்ணாட ியை கழற்றி வைத்துவிட்டு சோனியாவின் காலில் விழுந்து கும்பிட்டழுததாக பரவலாக சொல்லுகிறார்கள் உதாரணம் இப்படியிருக்கும ்போது நி என்ன சிவபெருமானா?
Quote
 
 
+5 #13 ravi45 2013-01-04 20:59
மனித நேயமற்ற ஒருவர்/பலர் நீதிபதி, கொடுமை.
Quote
 
 
+3 #12 Seithi porukki, Madu 2013-01-04 16:40
YOUR MEEN KULAMBU CASE MIGHT HAVE BEEN DISSMISSED BY LORD LABAKKU DASS". BUT YOU MADE IT TO BE PUBLISHED IN ALL MEDIA. HATS OFF TO SAVUKKU AND ADVOCATE RADHAKRISHNAN. - SEITHI PORUKKI, MADURAI.
Quote
 
 
+5 #11 ஊர் சுற்றி 2013-01-04 15:39
நான் பழகிய அத்தனை தெலுங்கர்களும் இதே மனபோக்கு உடையவர்கள் தான். மற்ற மொழி பேசும் மக்களிடையே இந்தமாதிரி பிறவிகள் இருக்கிறார்கள் என்று சொல்லாதிங்க...இவர்கள் மட்டும் தான். சீ...ஓட்டுனர் வேலையா என்று கேவலமாக பேசியவனைகூட கண்டதுண்டு.தனக்கு செல்வச்செழிப்பு வந்துவிட்டால் மனதில் தன்னை அரசனாகவே நினைத்து கொள்வார்கள். பூஜை, புலஸ்காரம் பெருசா இருக்கும், இழிபிறவிகள், இவர்களால் தான் சமூகம் கெட்டு குட்டிசுவர் ஆகிறது. இவர்களை திருத்தவே முடியாது. அருணா ஜெகதீசன் பேச்சு திமிர்பிடித்த பேச்சு ஜெயலலிதாவின் குணம் போன்றது.
Quote
 
 
+6 #10 santhosh2 2013-01-04 15:07
well done savukku! keep on moving! one day sure will get justice for justice.
Quote
 
 
+7 #9 D. Ramchandran 2013-01-04 12:54
அதிகாரத்தை, பதவியை, பணியாளர்களை நீதியரசர்கள் தவறாக பயன்படுத்துவதை கண்ட பின்னர் வழக்கு தள்ளுபடி செய்வது மட்டும் எவ்வாறு நேர்மையக செய்யப்போகிரார் கள் என்பதை அடிக்கொடிட்டு உணர்த்திவிட்டார ் தனது விடாப்பிடி வாதத்தால் திரு இராதாகிருஷ்ணன். பாராட்டுக்கள். ம்ம் அவர்களுக்கு உறைக்க வேண்டுமே?
Quote
 
 
+11 #8 PENIGABI 2013-01-04 12:48
இதே சென்னை உயர்நீதிமன்றத்த ில் நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலையில் எழுந்து, சமைத்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, கணவருக்கு உணவு கட்டி, தங்களுக்கும் உணவு கட்டி, உரிய நேரத்தில் வருகைப் பதிவேட்டைப் பிடிக்க, பேருந்துக் கூட்ட நெரிசலில் சிக்கி சக்கையாக பிழியப்பட்டு, நீதிமன்றம் வந்து, திமிர் பிடித்த வழக்கறிஞர்களிடம ் ஏச்சு வாங்கி, மாலை ஆறு மணிக்கு வேலையை முடித்து, மீண்டும் அதே கூட்ட நெரிசலில் சிக்கி, வீடு சென்று, மீண்டும் இரவு உணவு சமைத்து, வார இறுதியில் வரும் அந்த ஞாயிற்றுக்கிழமை க்காக ஏங்கியபடி தங்கள் வாழ்க்கையை ஓட்டுவது உங்களுக்குத் தெரியுமா ? அவர்களிடம் கேட்டுப்பாருங்க ள்… நீதிமன்றத்துக்க ு வந்தாலும் எப்படி சமைப்பது என்பதை சொல்வார்கள். நீதிபதியாகி விட்டால் சமையல் செய்வது கூட இழிவான செயலாக எப்படி மாறிப்போகிறது என்பது உண்மையிலேயே புரியவில்லை.

நச் நச் கேள்வி? SIMPLY SUPERB...
Quote
 
 
+9 #7 inigoanto xavier. 2013-01-04 12:35
வனக்கம் சவுக்கு அவர்களே.இந்த ஆளை எல்லாம் பேருந்துல போக சொல்லன்னும்.
Quote
 
 
+7 #6 nellai suresh 2013-01-04 11:08
very nice ariticle. I really appreciate your efforts.
Quote
 
 
+6 #5 செருப்படி 2013-01-04 10:25
செருப்படி இதுதான்.
Quote
 
 
+7 #4 Raja N 2013-01-04 10:14
சவுக்கு,
சிறிய வேண்டுகோள். இது போன்ற கட்டுரைகளை ஆங்கிலத்திலும் வெளியிட்டால் பலபேரை சென்றடையும்.
Quote
 
 
0 #3 E.V. Ramasamy 2013-01-04 08:28
Ha Ha Ha... See this is what I was talking about. You didn't listen to me then and you are not going to listen to me now. You are born to be a slave even if you don't want to be a slave, your masters have the power to keep you from getting away. Ha Ha ha...
Sincerely,
Ramasamy
No 1, Heaven & Hell
Milky Way, PIN: 000000
Quote
 
 
+7 #2 Karthikeyan S 2013-01-04 03:48
I am very much saddened and shocked to read this early in the morning. I had strong confidence that atleast Indian Judiciary will be there to protect the country as the last resort (as both the Legislative and the Executive Systems are in the worst possible condition now). My confidence grew up much looking at the Supreme Court's reprimands on Central Government, PMO, CBI (2G) etc. But everything is getting shattered reading your articles on Judiciary. Now I should admit that even GOD cannot save this country. At the same time, I hope brave people like you can help to control such misuse of powers to the minimum possible extent. Keep up your good work! Hearty Appreciations!

Finally, what is the reason for writing (wasting) a full paragraph against Jayalalitha in this article. As I pointed out earlier as well, your intentions are getting diluted. You are trying to exploit every single opportunity to write against her and not sure what you are trying to achieve out of this. My humble requests to you to concentrate more on the core issues in every article and not to look for places to blame/mock/slam Jayalalitha in every single article! Had to Condemn this!
Quote
 
 
+36 #1 நெல்லை பாலாஜி 2013-01-04 01:36
சூடு சொறன உள்ளவனுக்கு மானம் அவமானம் இருக்கும்...இவனுக்கு இருக்குமா ...இவரிடம் போய் "கொம்பு முளைத்த நீதிபதிகளாகிய உங்களுக்குத்தான ் அவமானம்." என்று கூறினால் எப்படி உரைக்கும்..

தனக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டும் , எதுவுமே தெரியாததுபோல் இந்த வழக்கை விசாரிக்கும் இது போன்ற நீதிபதியிடம் என்ன நீதி கிடைக்கும்..இது ஆங்கிலேயர் ஆட்சியை விட மோசமானது..

சும்மா கை கழுவ , கால் கழுவ , வீட்டு வேலை பாக்க ஆளுங்களை கொடுத்தால் இப்படித்தான் பேசுவாணுக...கொய்யால இவனுக கிட்ட போய், சாதாரண பெண்கள் எப்படி கஷ்டப்படுராங்கன ்னு சொன்ன எப்படி புரியும்...ஒரு வாரம் பஸ்ல வரச் சொன்ன தெரியும்..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 58 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2044
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week61209
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month274028
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796147