முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 23
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 17 ஜூன் 2013 20:00

திருப்பூர் மாவட்டம் கண்ணகி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் 31.08.2012 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

அப்போது திருப்பூர் உதவிக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் சிபிச் சக்ரவர்த்தி.  இவர் 2009ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர். 30க்கும் மேற்பட்ட நபர்களை காவல்நிலையம் அழைத்து வந்து சிபிச் சக்ரவர்த்தியே விசாரித்திருக்கிறார்.  இந்த 30 பேர்களுள் மோகன்ராஜ் மற்றும் ரமேஷ் ஆகிய சகோதரர்களும் அடக்கம்.

392566_336752149720772_904922927_n

 

சிபிச் சக்ரவர்த்தி ஐபிஎஸ்

 

கைது செய்யப்பட்ட 30 பேரும், திருப்பூர் காவல் நிலையத்தில்   சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சிபி சக்ரவர்த்தியே நேரடியாக அடித்துள்ளார். மறு நாள் 01.09.2012 அன்று திருப்பூர் நீதித்துறை நடுவர் முன்பு, 30 நபர்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருவது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீதித்துறை நடுவர், உடனடியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைத்துள்ளார். இதை அடுத்து, 30 பேரில் 30 பேர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.  மீதம் உள்ளவர்களில்  மோகன்ராஜ் உள்ளிட்ட நால்வர் மட்டும் எங்கோ ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

03.09.2012 அன்று மோகன்ராஜின் மனைவி, தாய், தந்தை ஆகியோரை காவல்துறையினர் அனுப்பம்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மோகன்ராஜின் உடலைக் காண்பித்து, அவர் காவல்துறைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க முயலுகையில் கீழே விழுந்து இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பிரதாயமான வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அந்த விசாரணையை இழுத்து மூடும் பணி நடைபெற்று வருகிறது.

மோகன்ராஜின் குடும்பத்தினரை மிரட்டி, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடக் கூடாது என்று காவல்துறையினர் மிரட்டி வந்துள்ளனர்.

இதையடுத்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  மோகன்ராஜின் மரணத்துக்கு காரணமான சிபிச்சக்ரவர்த்தி ஐபிஎஸ், குமார் ஆய்வாளர் மற்றும் இதரக் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்த, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள், சிபிச் சக்ரவர்த்தி, ஆய்வாளர் குமார், தமிழக காவல்துறை இயக்குநர், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு உரிய பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

இந்த சிபிச் சக்ரவர்த்தி, தன்னை காக்க காக்க திரைப்படத்தில் வரும் சூர்யா கதாப்பாத்திரம் போல நினைத்துக் கொள்பவர். மிக மிக மோசமான கோழையான நபர் இவர்.  காவல்துறை சீருடை கொடுக்கும் துணிச்சலில், அப்பாவிகளை கட்டி வைத்து லத்தியில் அடித்து தன் வீரத்தை பறைசாற்றிக் கொள்ளும் டுபாக்கூர் பேர்விழி இவர்.

திருப்பூர் காவல்நிலையத்தில் இவர் செய்த கொலையை கண்ணால் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள்.  கிராமத்தினர் 30 பேரையும் ஒன்றாக வைத்து இவரே அடித்திருக்கிறார்.  மோகன்ராஜை இவர் கடுமையாக தாக்கியதை நேரில் பார்த்த சாட்சிகள் எவ்வளவு மோசமாக சிபிச் சக்ரவர்த்தி நடந்து கொண்டார் என்று விவரித்தார்கள்.

225583_10150180091169965_6418791_n

இவரைப் புகழ்ந்து தினமலர் இதழில் இவர் வரவழைத்த "பெய்ட் நியூஸ்"

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு, சிபிச் சக்ரவர்த்தியின் சினிமா வீரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 
டுபாக்கூர் ஐ.ஏ.எஸ். அகாடமிகள்... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 8
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 15 ஜூன் 2013 19:13

ஜூன் இரண்டாம் வாரம்... இது ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களின் பொற்காலம். இப்போதுதான் அட்மிஷன் குவிந்து வங்கி கணக்கில் நிதிநிலை உயரும்.

poster

தலைநகர் சென்னையில் திரும்பிய இடமெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள்... எல்லா பயிற்சி மையங்களின் விளம்பரத்திலும் கடந்த ஆண்டு அவர்களின் மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தகுதியான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் மையங்களும் தற்போது பெருகி வருகின்றன. அதனால் தானோ என்னவோ தற்போது சென்னையில் மழை வருவதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. இத்தகைய பயிற்சி மையங்களின் நோக்கம், செயல்பாடு குறித்து அறிய களத்தில் இறங்கினோம்.

கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன. மாணவர்களை கவர அளவுக்கதிகமாக கவர்ச்சிகரமான பொய்களை உளறுவதும் நடக்கிறது.

கடந்த மே முதல் வாரத்தில் யுபிஎஸ்சி தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தியா முழுவதும் 998 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் 97 பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். இந்த முடிவுகள் வெளியானவுடன் தமிழக அரசின் குடிமை பணிகள் பயிற்சி மையம் தங்களிடம் படித்த மாணவர்களில் 49 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், மனித நேய அறக்கட்டளை தங்களிடம் படித்த மாணவர்களில் 45 பேர் தேர்வு செய்யபட்டதாகவும், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி தங்களிடம் படித்த மாணவர்களில் 51 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இது தவிர தமிழக மெங்கும் பல நூறு ஐ.ஏ.எஸ். அகாடமிகள் இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கையை கேட்டவுடன் நமக்கு தலை சுற்றியது. ஒவ்வொரு பயிற்சி மையமும் வெளியிட்ட தேர்வானவர்களின் பட்டிலை அலச தொடங்கினோம்.

IAS3

இது போல போலிச் செய்திகளை வெளியிட்டு, மனிதநேயம் அறக்கட்டளை மற்றும் சைதை துரைசாமியை வளர்த்து விட்டதில் தினத்தந்தியின் பங்கு மிகப்பெரிது

பட்டியல் ஒரு புதிராக இருப்பதை எங்களால் உணர முடிந்தது. எனவே யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என அந்த பட்டியலை தங்களின் பார்வைக்கு படைக்கிறோம்.

இதில் கோபாலகிருஷ்ணன், டி.கங்காதரன், எம்.பரணிகுமார், ஆர்.கேசவன் ஆகியோர் தங்களிடம் படித்ததாக மூன்று நிறுவனங்களும் தெரிவிக்கின்றன. (இப்பவே கண்ணை கட்டுதே....)

Untitled

இது தவிர 15 மாணவ, மாணவியர் தங்களிடம் படித்ததாக மனித நேய அறக்கட்டளையும், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியும் தெரிவிக்கின்றன. இதில் எது உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும். சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமிக்கு “லாபி” செய்ய சரியான ஆட்கள் இல்லாதததால் அவர்களின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த மாணவர்கள் எங்குதான் படித்தார்கள் என்று சரியாக கண்டுபிடித்து தருவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தர ஏகலைவன் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக சில விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.

* கண்டுபிடிப்பை தபால் கார்டில் எழுதி அனுப்ப வேண்டும்.

* அஞ்சல் தலை அவசியம் ஓட்டி இருக்க வேண்டும்.

* ஸ்பெக்டரம் ஏலமுறையை போல, முன்னால் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை உண்டு.

* ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது

உண்மையில் இந்த மாணவர்கள் எங்குதான் படித்தார்கள்?

ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் பகலில் நல்லவராகவும், இரவில் கெட்டவராகவும் இரட்டை வேடம் போடுவதை போல, பகலில் ஒரு நிறுவனத்திலும், இரவில் மற்றொரு நிறுவனத்திலும் படித்தார்களா? என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.

& ஆர்.சிங்காரவடிவேலன்,

முதன்மை கப்பல் பொறியாளர்,

நிர்வாக ஆசிரியர்.

நன்றி ஏகலைவன் வார இதழ்

குறிப்பு : சைதை துரைசாமி மனித நேயம் ஐஏஎஸ் அகாடமியின் பெயரில் நடத்தும் பகீர் மோசடிகள் குறித்து ஏற்கனவே சவுக்கு இணைய தளத்தில் அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும் என்ற கட்டுரையில் விரிவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
சொம்பாலானது... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 54
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 05 ஜூன் 2013 22:30

946833_484134978322375_1164224053_n_1

"தமிழ் நாட்டில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் அதை தன்னைச் சுற்றி நடக்கும் பிரச்சினையாக மாற்றி விடுகிறாரே கலைஞர்?''’என்று ஒரு முறை ஒரு பத்திரிகையாளர் என்னிடம் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். எனக்கு அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தமிழகத்தின் எந்த அரசியல் நிகழ்வும் இந்த மனிதரைத் தாண்டிச் செல்ல முடியாது என்பதற்கு கடந்த காலத்தில் எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் பிரச்சினையிலும் கலைஞர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதுதான் அந்த பிரச்சினையின் திசையையே தீர்மானிப்பதாக இருந்து வந்திருக்கிறது. அவர் அதிகாரத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்தான் தமிழக அரசியலின் மைய்ய நீரோட்டமாக இருந்திருக்கிறார். இந்திய அரசியலிலேயே இப்படி ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கக்கூடிய இன்னொரு தலைவரைப் பார்க்க முடியாது. இந்திய அரசியலில் கோலோச்சிய பல தலைவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு காலம் இருக்கிறது. அந்தக் காலம் முடிந்ததும் அரசியலில் அவர்கள் இடம் காணாமல் போய்விடும். வி.பி.சிங்., மொரார்ஜி தேசாய் போன்ற தேசிய தலைவர்கள் அவர்கள் வாழ்நாளிலேயே அரசியலிலிருந்து மறைந்து போனார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலின் மிகப்பெரிய சக்திகளாக விளங்கிய வாஜ்பேயி, எல்.கே.அத்வானி போன்றவர்கள் இன்று அரசியலிலிருந்து மங்கி மறைந்துகொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட எழுபதாண்டு பொது வாழ்க்கையில் நாற்பது வருடங்கள் தமிழக அரசியலில் ஒருபோதும் ஒளி இழக்காத நட்சத்திரமாக கலைஞர் இருக்கிறார். ஒரு மனிதருக்கு இது எங்கிருந்து சாத்தியப்படுகிறது? கலைஞர் அதிகாரத்திற்கு மட்டும் அரசியலில் இருந்திருந்தால் அதிகாரத்தை இழக்கும் போதும் அவர் தளர்ச்சியடைந்திருப்பார், ஆனால் கலைஞரின் அரசியல் என்பது இலட்சியவாதத்தின்பாற்பட்டது. அவர் ஒரு கட்சி நிர்வாகியோ மேடைப் பேச்சாளரோ அல்ல. சமூகத்தின் ஒவ்வொரு பிரச் சினைகளைப் பற்றியும் அவருக்குத் திட்ட வட்டமான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அந்தக் கருத்துக்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் அவர் இடையறாது போராடி வந்திருக்கிறார். அந்தக் கொள்கையும் போராட்டமும்தான் அவரை என்றும் ஒரு உயிர்ப்புள்ள வலிமையுள்ள சக்தியாக வைத்திருக்கிறது. அவரது அபிப்ராயங்களையும் எதிர்வினைகளையும் அடிப்படையாகக் கொண்டே தமிழகத்தில் ஒவ்வொருவரும் அரசியல் செய்தாக வேண்டும் என்கிற நிலையை கலைஞர் உருவாக்கினார்.

இந்த கருத்தியல் போராட்டம்தான் அவரை எமெர்ஜன்சியை எதிர்த்து அதி காரத்தை இழக்க வைத்தது. மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோதுகூட தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற் காக கண்ணீர் கவிதை எழுத வைத்தது. ராமர் பாலம் தொடர்பான விவகாரத்தில் பொதுஜன உணர்வுகளைப் பொருட் படுத்தாமல் பகுத்தறிவு சார்ந்த கருத்துக் களை துணிச்சலாக கூறவைத்தது. இவ்வளவு ஏன் இன்று இந்தியாவிலேயே மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வரும் ஒரே பெரிய அரசியல் தலை வர் கலைஞர் மட்டுமே.

ஆனால் கலைஞ ருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய துரதிர்ஷ்டம் இருக் கிறது. அவருயை காலத்தில் அவருக்கு சமமாக அரசியல் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அது. அனுபவத்தாலும் சிந்தனைத் திறனாலும் செயல்திறனாலும் மொழி ஆற்றலினாலும் அவரது தகுதிக்கு இணையில்லாத பலரோடும் அவர் வழக்காட நேர்ந்ததுதான் தமிழக அரசியலில் அவர் அடைந்த மிகப்பெரிய துயரம். ஆனால் அந்தத் துயரத்தையும் கலைஞர் மிகவும் வெற்றிகரமாக கடந்து சென்றார். வெவ்வேறு காலகட்டத்தில் கலைஞரோடு அரசியல் செய்த பலரும் காலத்தின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டபோதும் கலைஞர் தமிழக அரசியலின் மைய விசையாக நிலைத்து நின்றார்.

ஐந்து முறை தமிழக முதல்வர், 11 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர், 44 ஆண்டுகள் ஒரு கட்சியின் தனிப்பெரும் தலைவர் என்ற சாதனையை தக்க வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. தி.மு.க. தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட காலங்களில்கூட யாராலும் வெல்ல முடியாத மனிதராக கலைஞர் இருந்து வந்திருக்கிறார்.

அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாறு என்பது அவருடைய வரலாறு மட்டுமல்ல, தி.மு.க.வின் வரலாறு மட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாறும் அதுதான். அவர் தன் வாழ்வில் அடைந்த அத்தனை சிகரங்களையும் கடும் போராட்டத்தினாலும் உழைப்பினாலும் அடைந்தார். சினிமாவின் வெளிச்சமோ சாதி அரசியலின் குறுக்குவழிகளோ கலைஞரின் அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கவில்லை. மாறாக, தனது கொள்கை சார்ந்த அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார். கடும் அர்ப்பணிப்பினாலும் இடையறாத பணியினாலும் கட்சிக்குள் தனது இடத்தை உருவாக்கினார். இந்த அரசியலில் நிலைத்து நிற்பதற்காக அவரும் தி.மு.க.வும் எதிர்கொண்ட போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. எத்தனையோ ஒடுக்கு முறைகளுக்கும் வீழ்ச்சிகளுக்குப் பிறகும் அந்த இயக்கம் உருக்குக் கோட்டையைப் போல நின்றது.

இவ்வளவு சோதனைகளையும் சவால்களையும் சந்தித்த வேறெந்த இயக்கமும் கலகலத்துப் போயிருக்கும். அதன் தொண்டர்கள் தங்கள் பற்றுறுதியை இழந்திருப்பார்கள். ஆனால் கலைஞர் புயல் நடுவினிலே ஒரு தோணியைப் போல தி.மு.க.வை ஒரு மனத்திண்மை படைத்த மாலுமியாக கொண்டு செலுத்தி யிருக்கிறார். தனது உற்சாகத்தின் ரத்தநாளங்களை அடிமட்டத் தொண்டனின் இதயத்தின் அடிஆழம் வரை அவர் எப்போதும் இணைத்து வைத்திருந்தார். அந்த உற்சாகத்தின் வலிமைதான் ஒவ்வொரு முறையும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல தி.மு.க.வை உயிர்த்தெழ வைத்திருந்திருக்கிறது.

இந்திய தேசிய அரசியலில் ஒரு பிராந்திய கட்சி ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டியவர் கலைஞர்தான். கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க.தான் தீர்மானித்து வந்திருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநில கட்சியும் இவ்வளவு நீண்டகாலம் இத்தகைய ஒரு பாத்திரத்தை வகித்ததில்லை.


கலைஞர் விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சியவரல்ல. அவற்றை மிகுந்த மனத்தெளிவுடன் அவர் எதிர்கொண்டிருக்கிறார். அரசியல்ரீதியாக மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, அவரது உடல்நலம் என அனைத்தும் மிக அநாகரிகமான குரூரமான முறையில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விமர்சனங்கள் எழுதுகிற யாரும் கலைஞ ரிடம் எடுத்துக்கொண்ட இந்த சுதந்திரத்தை வேறு எந்தத் தலைவரிடமும் எடுத்துக்கொண்டதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தன்மீதான விமர்சனங் களுக்காக கலைஞர் பொய் வழக்கு போடமாட்டார், தினம் ஒரு மானநஷ்ட வழக்கு போட மாட்டார், பத்திரிகை அலுவலகத்தின் மின்சாரத்தை துண்டிக்க மாட்டார், பத்திரிகையாளர்களை போலீஸைவிட்டு ஓட ஓட துரத்த மாட்டார், பத்திரிகை அலுவலகங்களை ரவுடிகளை அனுப்பி சூறையாட மாட்டார் என்று அவர்களுக்குத் தெரியும்.

மாறாக, தன்மீது செய்யப்பட்ட அவதூறுகள், அவமதிப்புகள் அத்தனைக்கும் அவர் பொறுமையாக முரசொலியில் பதில் எழுதுவார். தனது நியாயங்களை மக்கள் முன்னால் எடுத்து வைப்பார். அவர் அதி காரத்திலிருந்தபோதும், அதிகாரத்தில் இல்லாதபோதும் இதைத்தான் செய்து வந்திருக்கிறார். தன்மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்காக ஒருவர் மீது வன்முறையை ஏவினார் என்று கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு சம்பவமும் இல்லை.

கூட்டணி கட்சிகளோடு அவர் மிக இணக்கமான உறவுகளைப் பாராட்டி வந்திருக்கிறார். அவர்கள் முரண்பட்டு நின்ற காலத்தில்கூட அவர்களை அவர் அவமதித்ததில்லை. அதே சமயம் அவரது நிலைப்பாடுகள் எப்போதும் உறுதியானதாக இருந்திருக்கின்றன. இந்திரா காந்தி ஒருமுறை குறிப்பிட்டதுபோல ‘கலைஞர் ஆதரிப்பது என் றால் உறுதியாக ஆதரிப்பார், எதிர்ப்பது என்றால் உறுதி யாக எதிர்ப்பார்‘ இந்த நம்பகத்தன்மைதான் தி.மு.க.வை தேசிய அரசியலில் இவ்வளவு காலம் நிலைத்து நிற்க வைத்தது.

கலைஞர் ஒவ்வொரு நாளும் தனது கட்சிக் காரர்களோடும் மக்களோடும் உரையாடிக்கொண்டே இருந்திருக்கிறார். கட்சியினுடைய பிரச்சினைகள், பொது மக்களுடைய பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள் என்று அவர் எழுதாத, பேசாத விஷயங்களே இல்லை. இந்திய வரலாற்றில் காந்திக்குப் பிறகு மக்களிடம் அதிகமாக பேசிய, எழுதிய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. இன்று இந்தியாவில் அரசியல் செய்யும் பல தலைவர்கள், பல முக்கியமான பிரச் சினைகளில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. பல பிரச்சினைகளில் யாருக்கும் எந்தக் கருத்தும் இல்லையென்பதுதான் உண்மை. ஆனால் கலைஞர் ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மிகத் துல்லியமாக அவர் அதைப் பதிவு செய்திருக்கிறார்.

நிலைப்பாடும் கோட்பாடும் உள்ள ஒரு மனிதரைத்தானே மற்றவர்களால் விமர்சிக்க முடியும். இது எதுவுமே இல்லாதவர்கள் கலைஞரைப்போல விமர்சிக்கப் படாததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

தி.மு.க.வின் வாரிசு அரசியல் பற்றி திரும்பத் திரும்ப புகார்கள் சொல்லப்படுகின்றன. இதுபோன்ற ஒரு போலியான குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்க முடியாது. முதலாவதாக, தி.மு.க. உள்கட்சி ஜனநாயகத்தைப் பின்பற்றுகிற ஒரு அமைப்பு. இன்று தமிழகத்தில் செயல்படும் பல கட்சிகளில் இருப்பதுபோல தனிநபர் தலைமையோ எதேச்சதிகாரமோ தி.மு.க.வில் சாத்தியமல்ல. தி.மு.க. பல்வேறு ஆளுமைகளை யும் தலைவர்களையும் கொண்ட ஒரு இயக்கம். தி.மு.க.வில் இருப்பதுபோன்ற சுயமான அடையாளம் கொண்ட தலைவர்களை தமி ழகத்தில் வேறெந்த கட்சியிலும் காண முடியாது. ஸ்டாலின் எவ்வளவு நீண்டகால அரசியல் பணிக்குப் பிறகு இப்போதிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார் என்பதை மனசாட்சியுடன் பார்க்கும் யாரும் அதை வாரிசு அரசியல் என்று சொல்ல மாட்டார்கள். கலைஞர் அவரை மற்றவர்களைத் தாண்டி முன்னி றுத்தினார் என்றோ அல்லது ஸ்டாலின் தன்னை முன்னிறுத்திக்கொண்டார் என்றோ கலைஞரின் அரசியல் எதிரிகள்கூட கூற முடியாது. இந்தியா முழுக்க அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அவசரஅவசரமாக எப்படி அதிகாரத்திற்குள் திணிக்கப்பட்டார்கள் என்பதையும் தமிழகத்திலிருக்கக்கூடிய சிறு கட்சிகளின் தலைவர்கள்கூட தங்கள் பிள்ளைகளையும் தங்களுக்கு நெருக்கமானவர்களையும் எவ்வளவு வேகமாக முன்னிறுத்துகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க.வின் மீது வைக்கப்படும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பது தெரியும்.

கலைஞரின் பேச்சுவன்மையும் மொழித் திறனும் தி.மு.க.வை மிக சவாலான காலங் களிலெல்லாம் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அவரது மொழிப் பிரவாகம் மிகவும் அபாரமானது. எந்தக் குழப்பமும் தடுமாற்றமும் இல்லாத மொழி ஆளுமையை அவர் மிக இளம் வயதிலிருந்தே கொண்டு வந்திருந்தார். இன்றளவும் அவர் எழுதிய திரைப்பட வசனங்கள் தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு தனித்த இடத்தை வகிக்கின்றன. ஒருமுறை நான் திருக்குறளுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு சிறிய ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு ஆச்சரியமான மிகப் பெரிய உண்மை தெரிந்தது. திருக்குறளுக்கு இதுவரை எழுதப்பட்ட உரைகளிலேயே கலைஞரின் உரை நவீனத்துவமானது, மூலத்திற்கு மிக நெருக்கமானது, சொந்த கைச்சரக்கு எதையும் சேர்க்காமல் முழுக்க முழுக்க ஆய்வுரீதியாக எழுதப்பட்ட உரை அது. கலைஞரை அரசியல் ஆக்கிரமிக் காமல் இருந்திருந்தால் தமிழின் பல்வேறு மகத்தான இலக்கியங்களுக்கும் காப்பியங்களுக்கும் அவர் இதுபோன்ற நவீனத்துவமான உரைகளை எழுதியிருக்கக் கூடும்.

தி.மு.க. அதிகாரத்திலிருந்த காலங்களில் அரசுத் துறைகள் பெருமளவு சுதந்திரமாக செயல்பட்டன. அரசியல் தலையீடுகள் மிகக் குறைவான, அதிகாரிகள் பயமின்றி பணியாற்றிய காலங்கள் அவை. அரசின் முடிவுகளில் தவறுகள் இருந்தால் அதை கலைஞரிடமே நேரடியாக சுட்டிக்காட்டி மாற்றுவதற்கான சுதந்திரம் தங்களுக்கு இருந்தது என்பதை பல உயரதிகாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அமைச்சர்களுக்கும் இந்த சுயேச்சையான அதிகாரம் இருந்தது. கலைஞர் அவருடைய வெவ்வேறு ஆட்சி காலங்களில் நிறைவேற்றிய முக்கியமான மக்கள்நலத் திட்டங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்தப்  பட்டியல் மிக நீண்டது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இரண்டு திட்டங்கள் அடித்தட்டு மக்களுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல்பாடாகும். முதலாவதாக, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம். தமிழகத்தின் மூலைமுடுக்கிலிருந்த மக்கள் அனைவரையும் வெளிஉலகோடு இணைத்த மிகப்பெரிய ஊடகப் புரட்சித் திட்டம் இது. அடுத்ததாக, அவசர மருத்துவ வசதிக்கான இலவச ஆம்புலன்ஸ் திட்டம். அடித்தட்டு மக்களின் உயிர் காக்கும் திட்டமாகவே இது இருந்தது. கலைஞரின் அரசியல் வாழ்க் கையில் மிக முக்கியமான ஒரு பங்களிப்பு, மிக பிற் படுத்தப்பட்டவர்களுக்கு அவர் கொண்டுவந்த 20 சதவிகித இடஒதுக்கீடு. சமூக நீதிக்காகவும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காகவும் கலைஞர் தன் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற பல உயரிய திட்டங்களைச் செயல்படுத்தி யிருக்கிறார்.

கலைஞர் அரசியலில் உருவாக்கிய இந்த மகத்தான பண்புகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவராக இன்று ஸ்டாலின் உருவாகியிருக்கிறார். அரசியல் நாகரிகம், உள்கட்சி ஜனநாயகம், அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு, உறுதியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றால் கலைஞரின் அரசியலை ஸ்டாலின் இன்று அடுத்தகட்டத்திற்கு, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறார்.

இந்த 90-வது வயதில் உலகத் தமிழர்களின் தமிழ் அடையாளத்தின் மிகப்பெரிய ஆலமரமாக கலைஞர் கிளை பரப்பி நிற்கிறார். இந்த விருட்சத்தின் நிழலில்தான் தமிழர்களின் நிகழ்கால அரசியல் சரித்திரத்தின் ஒவ்வொரு இயக்கமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

 

கருணாநிதியின் நூல் வெளியீட்டு விழாவில் சொம்படிச் சித்தர். 

 
ஆங்கிலம் ஏன், எங்கு, எந்த அளவில்? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 21
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூன் 2013 08:16

Image

ஆங்கில வழியில் பயில்வோர் ஆங்கிலத்தில்தான் உள் தேர்வுகள் எழுதவேண்டுமா, அநீதி, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என ஆளாளுக்கு கொதித்தெழ, அரண்டு போன ஜெயலலிதா அம்முயற்சியைக் கைவிட்டார்.

தமிழார்வலர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டார் புரட்சித் தலைவி. அடுத்து தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மேலும் பரவலாக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும் என இப்போது வலியுறுத்துகின்றனர். சிபிஎம்மும் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவதில் முன்னணியிலிருக்கிறது.

இது எந்த அளவு ஆரோக்கியமான போக்கு? ஆங்கிலத்திற்கு எந்த இடம், தமிழிற்கு எந்த இடம்?

மிகச் சிறு பிராயத்தில் தாய்மொழியைத் தவிர வேறு மொழியைக் கற்பதே தேவையில்லாததொரு சுமை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தாய்மொழி மூலம் எதனையும் கற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது என்றும் கூறப்படுகிறது, ஆறாம் வகுப்புவரை ஆங்கிலம் அநாவசியம் என்று கூட சில வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் யதார்த்தமென்ன? அங்கிங்கெனாதபடி ஆங்கிலம் எங்கும் வியாபித்திருப்பதுதான். தாய்மொழியில் பலவற்றைச் சாதிக்கமுடியும் என்று நிரூபித்த ரஷ்யர்களும், சீனர்களும், ஜப்பானியரும் ஆங்கிலம் பக்கம் திரும்புகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டைத் தவிர வேறு எங்குமே ஆங்கிலத்திற்கெதிர்ப்பில்லை எனலாம். முஸ்லீம் நாடுகளில் ஆள்வோரும் அவர்களது ஏவலாளர்களும்  ஆங்கிலம் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆங்கிலம் முடிவு கட்டிவிடுமோ என்று கூட அஞ்சலாம். ஆனால் அவர்களும் ஆங்கிலத்தை ஏதாவது ஒரு வழியில் அனுமதிக்கவே செய்கின்றனர்.

உலகமயமாக்கலின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியே ஆங்கிலமும். உலகமயமாக்கலை எவ்வளவு அனுமதிக்கலாம், கூடாது, என முடிவில்லாமல் வாதிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அத்தகைய போக்கின் பல்வேறு சீரழிவுகளை நாம் எங்கும் பார்த்துத்தான் வருகிறோம், அமெரிக்காவிலேயே கூட அதற்கெதிர்ப்பெழுந்திருக்கிறது, அடித்தட்டுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதெல்லாம் உண்மையாயினும் கூட எப்படி காலனீய ஆதிக்கம் இந்தியாவிலும் மற்ற பல நாடுகளிலும் நிலவுடைமை அமைப்பினை, மதத்தரகர்களின் கோரப்பிடியினை அசைத்து அறியாமை நீங்க வழி கோலியதோ அதே போல ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு உலகமயமாக்கல் வழிசெய்கிறது என நினைக்கிறேன். அதற்குமப்பால் அது தவிர்க்கமுடியாததென்றும் நினைக்கிறேன்.

எந்த ஒரு நாடும் சமூகமும் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பன்னாட்டு சக்திகளைப் புறந்தள்ளமுடியும் என்று தோன்றவில்லை. அப்படிச் செய்ய முயல்வது தாலிபான்களுக்கும் வழிவகுக்கக்கூடும்.  அல்லது மேற்குலகை நிராகரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வடகொரியா வகை ‘கம்யூனிச’த்திற்கு.

பல்லக்கு தூக்கும் அளவு உனக்கு வலுவிருந்தால் போதும் அதை மட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனக் கொக்கரிக்கும் ஆளும் வர்க்கத்தினையும் அவர்களது ஏவலாளிகளான நடுத்தரவர்க்கத்தினரையும் தீவிரமாக எதிர்கொண்டு பொருளாதார சமூக நீதி கணிசமான அளவு உறுதிப்படுத்தப்படுவதைத் தாண்டி உலகமயமாக்கலை எதிர்ப்பது அபத்தம்.

அதே பார்வையிலிருந்துதான் நான் ஆங்கிலத்திற்கான இடத்தையும் பார்க்கிறேன். வேலைவாய்ப்பினை உறுதி செய்வது மட்டுமல்ல, நம் அறிவினை விசாலப்படுத்திக்கொள்ள ஆங்கிலம் தவிர்க்கவியலாதது.

என்ன இல்லை என் தாய்த்தமிழில் என மைக் பிடித்துக்கொண்டு முழங்கலாம். ழ இருக்கிறதா, வள்ளுவம் என்ன சொல்கிறது தெரியுமா, என்றெல்லாம் அரற்றலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் ஆங்கில ஆதிக்கம் தவிர்க்கவியலாதது. அனைத்து தரப்பினரும் அதில் தேர்ச்சி பெறுவதைத் தடுப்பது ஒன்று அறிவீனம் அல்லது இரட்டை வேடம் போடுவதாகும். கருணாநிதி அப்படிச் செய்யலாம், வைகோ செய்யலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் இதற்கு இரையாகின்றனர்?

குறிப்பாக ஆங்கிலவழியில் பயில்வோர் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும் என்பதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. அப்புறம் எப்படித்தான் ஆங்கிலம் கற்பதாம்? ஆங்கிலவழியில் படித்தேன் பட்டம் பெற்றேன் என்று சொல்லிவிட்டு அரைகுறை ஆங்கில அறிவுடன் வெளியுலகை சந்திக்கும்போது எத்தனைவித இடர்ப்பாடுகளை அம்மாணவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும்? தமிழார்வலர்களோ இடதுசாரிகளோ அவர்களுக்கு வேலை வாங்கித்தந்துவிடமுடியுமா? தமிழ்வழியில் பட்டம்பெற்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்பதைக்கூட எவரும் உறுதிசெய்யமுடியவில்லை. இப்போதெல்லாம் அரசுப் பணிகள்வேறு அருகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்வழியில் படித்து இவர்கள் சாதிக்கப்போவது என்ன?

வேலை வாய்ப்பின்றி, பிழைப்பதே பெரும் பாடாகும் அவலத்தை இடதுசாரிகள்கூட சரிவர உணராமல் தமிழ்ஜோதியில் கலப்பது ஆகக்கூடுதலான வேதனை.

நமது வழக்கறிஞர்க்ளைப் பார்க்கும்போது, நீதிமன்றங்களில் அவர்கள் வாதாடும்போது ஆங்கிலப் போதாமையின் கொடுமை நமக்கு உறைக்கும். ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞர்களுக்கும் தெரியாதவர்களுக்குமிடையே எவ்வளவு பெரிய இடைவெளி என்பது நீதித்துறையினை அவதானிப்பவர்களுக்கே விளங்கும்.

மனு எப்படி பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டார்? பிராமணரல்லாதோர் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றார். கல்வி ஆதிக்கசாதியினர்க்கும் மட்டுமே என்றிருந்தது. அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் வடமொழி மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் நவீன பிராமணர்களாகிவிட்டனர் என்பதே கசப்பான உண்மை.

இந்த ஆளும்வர்க்க-நடுத்தரவர்க்க கூட்டைத் தகர்த்து சமூகத்தினை ஜனநாயகப்படுத்துவதில் ஆங்கிலத்திற்கு மிக முக்கிய பங்கிருக்கிறது.

ஆனாலும் எவ்வினமும் எச்சமூகமும் தாய்மொழியினை புறக்கணிக்கலாகாது. தாய்மொழி வழியே சிலவற்றைக் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் . தொடக்கக் கல்வி மட்டும் தாய்மொழி வழியில் என்றால்  போதுமானது.

அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியிலேயே தொடக்கக்கல்வி என்பதை விதியாக்கவேண்டும். ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். எவருக்கும்  விதிவிலக்கில்லை.

மேலும் எந்தவொரு மாணவரும் குறிப்பிடத்தகுந்த அளவு தத்தம் தாய்மொழியில் தேர்ச்சிபெறமுடியாமல் பள்ளிப் படிப்பை முடிக்கமுடியாது என்ற நிலையினையும் உருவாக்கவேண்டும். தாய்மொழி அறிவு, பண்பாட்டுக்கூறுகளை நிராகரித்துவிட்டு பொதுவெளியில் அடியெடுத்துவைக்கமுடியாது என்றாகவேண்டும். அதற்கப்பால் அவரவர் விருப்பம், ஆர்வம், சூழல்.

ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழியிலேயே அனைத்து பள்ளிகளிலும் என்றாகவேண்டும். போதுமான அளவு ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவேண்டும்.

இல்லை, என்ன விலைகொடுத்தாவது உலகமயமாக்கலையும் ஆங்கிலமயமாவதையும் தடுத்து நிறுத்தவேண்டும், அதுவே புரட்சி என்றால் அதற்கு என்னிடம் விடையில்லை.

நன்றி http://angsto.wordpress.com/

 
சவுக்கு தளம் மீது சன் டிவி மகாலட்சுமி காவல்துறையில் புகார்... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 198
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 31 மே 2013 14:58

சவுக்கு இணையதளத்தில் வெளிவந்த இரண்டு பேர் ஏழு காதல் கட்டுரை தொடர்பாக  சன் டிவி  மகாலட்சுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

29529_132364633445226_2686343355_n

சன் டிவி மகாலட்சுமி பற்றி இரண்டு பேர் ஏழு காதல் (கரெக்டா எண்ணிதானே போட்டோம்... அப்பவும் ஒன்னு ரெண்டு விட்டுப் போயிருக்குமோ...) என்ற கட்டுரை வந்திருந்தது.  இந்தக் கட்டுரையில் வெளிவந்த அத்தனை விஷயங்களும் முழுக்க முழுக்க பொய் என்றும், முழுக்க முழுக்க அவதூறான கட்டுரை இது என்றும் தன் புகாரில் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.  இன்று காலை 12.30 மணிக்கு, வழக்கறிஞர்கள் புடைசூழ சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார்.

மகாலட்சுமி குறித்து எழுதப்பட்ட கட்டுரையில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்று மொக்கையாக பம்மாத்து பண்ணுவது சவுக்கு தளத்தின் அழகல்ல...  இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது.  நீதிபதியால் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவு (Remand Order) வழங்கப்பட்ட பிறகு, கோடை விடுமுறையில் காய்ந்து போய் வருமானம் இல்லாமல் இருந்த 100 வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு, நீதிமன்றத்தில் அடாவடி செய்து, நீதிபதியை மிரட்டி அவரது தாயார் ஜான்சி ராணிக்கும், அவர் தம்பி சதீஷுக்கும் ஜாமீன் வாங்கயிதைப் போன்ற அடாவடி செயல் எதுவுமே இருக்க முடியாது.

தனக்கு விருப்பமானவரோடு வாழ்வது மகாலட்சுமியின் தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் அந்த விருப்பத்திற்காக, ஒரு பெண்ணின் மீது அபாண்டமான பழி சுமத்தி, அந்தப் பெண்ணை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விட்டு, என்னென்ன கொடுமைகளையெல்லாம் செய்ய முடியுமோ, அந்த அளவு கொடுமைகளைச் செய்வதை எப்படிப் பார்த்துக் கொண்டு வாளாயிருப்பது ?  எந்தத் தவறும் செய்யாத அந்தப் பெண்ணின் வாழ்வில் ஐந்து வருடங்கள் வீணாகிப் போய் விட்டன.  அந்தப் பெண் வாழ்க்கையையே இழந்து நிற்கிறார் மகாலட்சுமியால்.  இந்தக் கதையைக் கேட்ட பிறகும் எப்படி எழுதாமல் இருப்பது ?

சன் டிவி ராஜாவுக்கு தான் ஆதரவு அளித்ததால் சவுக்கு தளத்தில் இப்படி ஒரு கட்டுரை எழுதப்பட்டது என்று மகாலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.  சன் டிவி ராஜா கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. இப்போது மகாலட்சுமியைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன ?

தனது தம்பி மனைவி வேறு ஒரு ஆணோடு சினிமா பார்க்க வந்திருந்தார் என்ற காரணத்தால், அனைவர் முன்னிலையிலும், அவரை, தன் தம்பியோடும், தாயாரோடும் சேர்ந்து கடுமையாக தாக்கியிருக்கிறார் மகாலட்சுமி.  அந்தப் பெண் கீழே விழுந்ததும் காலில் போட்டு மிதித்திருக்கிறார் மகாலட்சுமி.  இப்படிப்பட்ட அராஜகத்தைச் செய்து விட்டு, வழக்கறிஞர் என்பதால் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கிறார் மகாலட்சுமி.... இதற்குப் பிறகும், இந்த விபரங்கள் தெரிந்தபிறகும், சவுக்கு தளத்தில் மகாலட்சுமியை அம்பலப்படுத்தாவிட்டால் வேறு எதற்காக இந்தத் தளம் நடத்தப்படுகிறது... ?

நடந்த உண்மையை எழுதுவதைத் தவிர, நம்மால் வேறு என்ன செய்ய முடியும் ?  ஆகையால் நடந்த உண்மையைச் சொல்வது என்ற உள்நோக்கமும், மகாலட்சுமியின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவது என்ற உள்நோக்கமும், அந்தக் கட்டுரையின் பின்னால் நிச்சயம் உண்டு.  ஆகவே இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடு எழுதப்பட்ட கட்டுரை என்பதை சவுக்கு தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறது.

 
பால் கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் அடாவடி… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 36
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 23 மே 2013 20:02

IMG_9083

இன்று (23/05/2013) காலை சுமார் 11.30 மணியளவில் வரதட்சிணை வழக்கில் கைது செய்யப்பட்ட சன்டிவி மகாலட்சுமியின் தாயார் ஜான்சி ராணி மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோரை நாகூரிலிருந்து கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்த அழைத்து வந்தனர் காவல்துறையினர்.

கைது அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜான்சி ராணி மற்றும் சதீஷ் ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.  பால்கனகராஜ் அனுப்பிய 100 வழக்கறிஞர்கள், எழும்பூர் நீதிமன்றத்தில் குழுமி, காவல்துறை வாகனத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் சிறைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர்.  ஜாமீன் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்ற நடுவரை மிரட்டினர்.  இதற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த பால் கனகராஜ் மதியம் 2.30 மணிக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கறிஞர்கள் மிரட்டியதால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய 13வது பெருநகர நீதிபதி சிவசுப்ரமணியன், ஜான்சி ராணி, சதீஷ் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டு விட்டு விடுப்பில் சென்று விட்டார். இதையடுத்து எழும்பூர் 5வது பெருநகர நீதிமன்ற நடுவர் உமா மகேஸ்வரி முன்பு ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏறக்குறைய 100 வழக்கறிஞர்கள், நீதிமன்ற நடுவரை மிரட்டும் தொனியில் அங்கே குழுமியிருந்தனர். அந்த வழக்கறிஞர் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட பால்கனகராஜ், இரண்டு கைதிகளையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும், இது பொய் வழக்கு என்று வாதிட்டார். வேறு வழியில்லாத நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

வெளியில் வந்த பிறகு அங்கே படமெடுக்க குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து வழக்கறிஞர்கள் இந்த வழக்கைப் பற்றி எழுதவோ, புகைப்படம் வெளியடவோ செய்தால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும், கடுமையாக தண்டனை கிடைக்கும் என்று மிரட்டினார்கள்.  எந்த புகைப்படக் கலைஞரும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

கலைஞர் டிவிக்கு மட்டும் மகாலட்சுமி பேட்டியளித்தார்.  அப்போது அவர், இது பொய் வழக்கு என்பதை பரிந்து கொண்டதால்தான் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  புகார் கொடுத்த பெண் நடத்தை சரியில்லாதவர். அதைத் தட்டிக் கேட்டதால், தங்கள் மீது பொய்ப் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை வெளியிட்டதால், சவுக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து கடுமையான தண்டனை பெற்றுத் தருமாறு, பால்கனகராஜ் மற்றும் அவர் ஜுனியர்களை சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது.

 
«முதல்முந்தைய12345678910அடுத்தகடைசி»

பக்கம் 1 / 37

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 110 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7768
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week21211
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month255258
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13171625